தமிழ் வி(ஞ்ஞா)ண்ணான புரோபசர்மார்க்கு

கனம் மதிப்புக்குரிய விண்ணான தமிழ் புரோபசர்மார்க்கு
ஐயா வணக்கம்,
கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் அவிஞ்சு போய் 2ம் முறையில் எப்பிடியாவது கரைசேர்வதற்கு முயன்றுகொண்டிருக்கும் அனுபவமிக்க மாணவன் நான் தங்களுக்கு எழுதும் (புலம்பல்) வேண்டுகோள் மடல் இது..

ஐயா கடந்த வருடம் இறுதி பரீட்சைக்கு சரியான ஆயத்தமில்லாமல் choice ஏ துணை என பரீட்சைக்கு சென்றேன்.

வினாத்தாளில் நான் விடையறிந்த இரு வினாக்கள் மட்டுமே காணப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு கேள்விக்கு என்னால் விடையளிக்கமுடியவில்லை. காரணம் விடை தெரியால் அல்ல.. நீங்கள் கேட்ட வினாவுக்கு குறிப்பிட்ட அந்த பாடத்தில் நான் பூரண தெளிவு பெற்றிருந்தும் உங்கள் கேள்வி எனக்கு புரியாததால் விடையளிக்க முடியவில்லை..
(கேள்வி மயக்கம், தங்களின் கடும் தமிழ் பிரயோகிப்பு)

அதாவது "கணிசமான" என்கிற ஒரு பதத்திற்கு கூடவா? குறையவா என்கிற சந்தேகத்தில் 20 புள்ளிகள் பறந்து போய்விட்டது. எனக்கு விடை தெரிந்ததே 2 கேள்விகளுக்கு மட்டும் தான் அதில் ஒரு கேள்வி தங்கள் தமிழ் புரியாததால் பறந்து போனது.

பரீட்சை வினாத்தாளில் எளிய தமிழை பிரயோகிக்கலாம் தானே? ஏன் கடும் தமிழை பிரயோகிக்கிறீர்கள்..? மேலதிகமாக நாம் இலக்கணமும் அல்லவா கற்க வேண்டிய தேவை உண்டாகிறது.

இது போக கடந்த வருட உயிரியல் வினாத்தாளில் 'காற்றிற் சுவாசம்", "காற்றில் சுவாசம்" இரண்டிற்குமான வேறுபாடு, விளக்கம் கேட்டிருந்தீர்கள்.

இங்கே "காற்றிற்", "காற்றில்" என்பதில் பாரிய மயக்கம் பரீட்சை மண்டபத்திலே ஏற்படுகின்றது.
காற்றில் என்பதை காற்றில்லாத போது எனக்கொள்வதா? காற்று + இல்(5 ம் வேற்றுமை) காற்றுள்ளபோது எனக்கொள்வதா? இதைப்போலவே காற்றிற் என்பதற்கும்...

இதே போல பல பதங்கள் இவற்றுக்கெல்லாம் எளிய தமிழை பிரயோகிக்கலாம் தானே..? ஏன் இந்த கடுந்தமிழ்.. பரீட்சை பேப்பரிலும் தமிழ் வாழணுமா? (இங்கே தமிழ் வாழ்கிறது அநியாயமாக இந்த கொடுந் தமிழால் நாங்கள் சாகின்றோம்)

இது போக உங்கள் வினாத்தாளிற்கான விடை மதிப்பீடு செய்யும் scheme ஒரு கேள்விக்கு வருடத்திற்கொரு விடை கொடுக்கிறது. ஒரு கேள்விக்கு பல விடை எதை நாங்கள் எழுதுவது.
எங்களுக்கென்றொரு பொதுவான புத்தகம் இருப்பின் அதன் படி விடையளிக்கலாம் ஆனால் அதுவும் இல்லை.
ஒவ்வொரு வாத்திமாரும் ஒவ்வொரு புத்தகத்தை பரிந்துரைக்கிறார்கள். எதைப் படிக்க?

புத்தகம் எழுதுகிறவர்கள் ஒவ்வொருவரும் தம் புலமையை வெளிக்காட்ட எழுதுகிறார்களே தவிர பரீட்சைக்கு தகுந்தாற்போல் எழுதுவதில்லை....

கடந்த வருடம், வினாத்தாளில் "புவிக்கு நைதரசன் கிடைக்கும் வழிகளை குறிப்பிடுக" என ஒரு கேள்வி இதற்கு பலர் இடி, மின்னல் என விடை கொடுத்திருந்தார்களாம்.

ஆனால் தாங்கள் இடி என எழுதப்பட்டிருப்பின் புள்ளிகள் வழங்கக்கூடாது என தெரிவித்திருந்தீர்களாம். இதற்கு தாங்கள் கொடுத்த விளக்கம் இடியும் மின்னலும் கிட்டத்தட்டவானவையாக இருப்பினும் மின்னல் தான் முன்னுக்கு வருவது ஆகவே மின்னல் தான் சரியானது என.

ஆனால் சகோதர மொழியில் இடி என எழுதப்பட்டதற்கு புள்ளிகள் வழங்கப்பட்டதாம். அங்கே வழங்குகிறார்கள் என்றால் நீங்களும் புள்ளிகள் வழங்கியிருக்கலாம் தானே...

இங்கேயும் உங்கள் தனித்துவமா? ஏற்கனவே தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஒரு நிலை இதில் தாங்களில் ஞாய, தர்ம கட்டுப்பாடு, தனித்துவங்கள் இன்னும் எம்மை பாதிக்காதா...

இலங்கை கல்வி தரம் வாய்ந்தது நாங்களும் அறிவோம். ஆனால் இப்படியான விடயங்கள் தரத்தை தீர்மானிப்பதாக இராது.

உங்கள் கடுந்தமிழ்கள் நுண்ணங்கிகள், நோய்கள், விஞ்ஞான பெயர்களில் பிரயோகிக்கப்படாத வரை சந்தோசம்.

உங்கள் கடுந் தமிழ் தாங்க முடியாமல் தான் என்னமோ பலர் முதலாவது முறைக்கு பின்னர் லண்டன் ஏலெவலுக்கு ஓடுகிறார்கள். அங்கே நேரடியான கேள்விகள் தானாம்.

ஏற்கனவே சாதாரண பாடம் சித்தியடைந்தவர்களிவ் 80தமானவர்கள் தான் உயர்தரத்திற்கு வருகிறார்களாம். மிகுதி பேர் வெளிநாட்டு கல்வியை நாடுகிறார்கள்.

தங்களின் மேற்சொன்ன பிரச்சனைகள் அதிகரிப்பின் 80 வீதம் 40 வீதம் ஆனால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஐயா இது தங்களுக்கான கண்டன மடல் அல்ல ஓர் விண்ணப்ப மடல்.

தயவு செய்து கருணை காட்டவும்.

தங்கள் மறுமொழியை பரீட்சை வினாத்தாளில் எதிர்பார்த்த வண்ணம்தங்களின் உண்மையுடைய மாணவர்கள்.

தமிழ் வாழ்க எங்கள் பரீட்சை பேப்ரில் தவிர.....

13 comments:

Subankan சனி, மார்ச் 20, 2010 6:38:00 முற்பகல்  

நியாயமான கேள்விகள் இலங்கா, இப்படியோரு குழப்பம் எனக்கு பௌதிகவியல் பரீட்சையில் ஏற்பட்டது.

இலங்கன் சனி, மார்ச் 20, 2010 6:50:00 முற்பகல்  

அண்ணா அம்புட்டும் என் கடந்தகால பிரச்சனைகள்..

ம.வேணுதன் சனி, மார்ச் 20, 2010 9:20:00 முற்பகல்  

நியாயமான பிரச்சினை தான். இந்தப் பிரச்சினையின் தாக்கம் பரீட்சைத்தாளில் மட்டுமல்ல இலங்கா கல்லூரியிலும் தொடரும். உதாரணத்துக்கு யௌவனப்பருவத்தில் ஆண்களில் சுரக்கும் ஓமோன் (Hormone)"தெஸ்தோதேஸ்திரன்" எண்டு தான் தமிழில படிச்சிருப்பம். ஆனா அதே ஹோர்மொனினுடைய ஆங்கில உச்சரிப்பு வேறுமாதிரியாக இருக்கும். அதைப்பற்றி கல்லூரில விரிவுரையாளர் பாடம்நடத்தும் போது அவரோட சாதாரண ஆங்கிலமே புரியாம (இங்க தமிழே புரியாதுங்கிறது வேற விஷயம்) பப்பரப்பே எண்டு பர்த்திட்டிருக்கிற எங்களுக்கு சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த மாதிரித்தான் இருக்கும். கடைசீல மூணுமணி நேரமா அந்தாள் எதப்பத்தி கத்திட்டு போறான் எண்டு Guideஅ திறந்து பார்த்தா அது "Testosterone"ஆ இருக்கும். ( இது எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம்.)

Unknown சனி, மார்ச் 20, 2010 12:02:00 பிற்பகல்  

//இது போக கடந்த வருட உயிரியல் வினாத்தாளில் 'காற்றிற் சுவாசம்", "காற்றில் சுவாசம்" இரண்டிற்குமான வேறுபாடு, விளக்கம் கேட்டிருந்தீர்கள்.//

இந்த இரு கலைச்சொற்களுக்குமான விளக்கமும் வித்தியாசமும் பாடத்திட்டத்தில் மிகத்தெளிவாகவே உள்ளன.

காற்றில் சுவாசத்திற்கு "காற்றின்றிய சுவாசம்" என்றொரு பயன்பாடும் உண்டு. இது மேலும் தெளிவானது.

Anaerobic Respiration என்பதுதான் அது.

படிகும்போது "காற்றில்" சுவாசம் என்ற சொல்லையே காணாமலிருந்த மாணவர்கூட, மேற்குறிப்பிட்ட கேள்வியைப்பார்த்ததும், அக்கேள்வியின் பொருளைப் புரிந்துகொள்ள சிக்கல்கள் பெரிதாக இருப்பதாகப்படவில்லை.

aerobic Respiration, Anaerobic Respiration எனும் இரு வகை பற்றிப்படித்த மாணவருக்கு மேற்காணும் கேள்வி அதனைப்பற்றியதுதான் என்பதைப்புரிந்துகொள்ள அதிக நேரமெடுக்கப்போவதில்லை.

ஆகவே பிரச்சினை, இதில் எது Anaerobic Respiration என்பதை இனங்காண்பதே.

தமிழைத் தாய்மொழியாகக் கற்ற மாணவருக்கு அதிலும் கூட சிக்கல்கள் இருப்பதுபோல் படவில்லை.

காற்றில் செய்யப்படும் சுவாசம் என்ற அர்த்தத்தில் காற்றில் + சுவாசம் என்று எழுதும்போது சந்திப்பிழையற்று எழுதவேண்டுமானால் அது காற்றிற் சுவாசம் என்றே எழுதப்படும். இது ஏழாமாண்டில் கற்றிருக்கவேண்டிய சந்திகள் பற்றிய அறிவு.

காற்று இல்லாத சுவாசம் என்ற அர்த்தத்தில் எழுதப்படும் போது அங்கே முதல் சொல்லின் இறுதி எழுத்து மருவாது. எனவே அது காற்றில் சுவாசம் என்பதாகவே வரும்.

alga, algae எனும் இரு சொற்களை உயிரியல் பாடத்தில் பயன்படுத்தும் போது, கிரேக்க லத்தீன் இலக்கணண்ங்ன்களை எல்லாம் படித்தா நான் ஆங்கிலத்தில் உயிரியல் கற்க வேண்டும் என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை.

தமிழ் இலக்கண அறிவு ஒரு மாணவருக்கு ஆழமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் போது தான் கூச்சலும் குழப்பமும் எழுகிறது.

இலக்கணப்பிழையாக ஆங்கிலம் எழுதினால் பெருத்த அவமானம் கொள்ளும் ஆட்களுக்கு இலக்கணப்பிழையாகத் தமிழை எழுதுவது ஸ்டைலாகிப்போகிறது.

இது உள்ளார்ந்த தாழ்வுச்சிக்கலால் விளைவதேயன்றி வேறெதுவுமல்ல.

Unknown சனி, மார்ச் 20, 2010 12:05:00 பிற்பகல்  

/கணிசமான/

என்பதில் அப்படி என்ன சிரமம் உள்ளதென்று எனக்குப்புரியவில்லை.

அன்றாடம் நாம் செய்திகளிலும் புத்தகங்களிலும் கேட்கும், படிக்கும் மிகப்பரவலான புஅழக்கத்தில் உள்ள தற்காலச் சொல்தானே அது?

Unknown சனி, மார்ச் 20, 2010 12:08:00 பிற்பகல்  

/இருப்பினும் மின்னல் தான் முன்னுக்கு வருவது ஆகவே மின்னல் தான் சரியானது என./

அவர்கள் சொன்ன விளக்கம் இதுவாக இருப்பின் இந்த விளக்கம் முற்றிலும் தவறானது.

மின்னல் ஏன் சரியான விடையாக அமைகிறதென்றால், "மின்னல்" எனும் செயற்பாட்டில் உருவாகிற மின்சாரம் தான் வளியிலுள்ள நைதரசனை மழை நீர் பெற்று நிலத்துக்குக் கொண்டுவர உதவுகிறது.

Unknown சனி, மார்ச் 20, 2010 12:09:00 பிற்பகல்  

/உங்கள் கடுந்தமிழ்கள் நுண்ணங்கிகள், நோய்கள், விஞ்ஞான பெயர்களில் பிரயோகிக்கப்படாத வரை சந்தோசம்/

இத்தகைய பெயர்களில் பயன்படுத்தப்ப்ட்டிருக்கும் மிகப்புராதனமான, புதினமான, கடினமான லத்தீன் பயன்பாடு பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

archchana சனி, மார்ச் 20, 2010 7:16:00 பிற்பகல்  

சிங்களவன் பிழைக்கு சரி போடுகிறான் என்றால் நாங்களும் அதை எதிர்பார்ப்பது தவறுதானே. அத்துடன் மு.மயூரன் சொன்னதைத்தான் நானும் வழிமொழிகிறேன். அதைவிட நீங்கள் ப்ளாக் எழுதுவதை பரீட்சை எடுத்தபின்னும் எழுதலாம். இப்போ கஷ்டப்பட்டு படிப்பது தான் முக்கியம்.( சிறு வயது பிளாக்கர் என்ற பெயர் பின்னுக்கு உதவாது. )

ilangan செவ்வாய், மார்ச் 23, 2010 11:39:00 முற்பகல்  

மயூரன் அண்ணா இந்த 'கணிசமான' என்பதில் எனக்கு பிரச்சனை வரவில்லை வகுப்பில் முதல் நிலை மாணவர் ஒருவருக்கு பரட்சை மண்டபத்திலே வந்தது .
பொதுமை படுத்தல் பிரச்சனை வந்திடுமோ என்பதால் தான் எனது சிக்கல் என குறிப்பிட்டிருந்தேன்.

அது போக காற்றில் சுவாச பிரச்சனை இதர கடுந் தமிழ் பிரச்சனைகள் வகுப்பில் உயிரியல் ஆசிரியர் புளுங்கிக்கொண்டதை தான் நான் பதிவாக இட்டிருந்தேன்.

உடனே எழுதியதால் தக்க கடுந்தமிழ் மயக்கங்களை உதாரணம் காட்ட முடியவில்லை .

ஆனால் இந்த இலக்கணத் தமிழ் விளங்காமல் கோட்டை விட்டவர்களை உதாரணம் காட்ட முடியாவிட்டாலும் இதால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிரண்டு கேள்விகள் கோட்டை விட்டவர்கள் பலர்...

மற்றப்படி நானும் ஒட்டகத் தமிழை அனுபவித்தவன் தான்...

நன்றியண்ணா கருத்துரைக்கு...

ilangan செவ்வாய், மார்ச் 23, 2010 11:45:00 முற்பகல்  

//ம.வேணுதன் கூறியது//

வாங்கோ வேணுதன் அண்ணா உங்களை மாதிரி இந்த அனுபவஸ்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள, கடுந்தமிழ் கஸ்ரங்களை பகிர்ந்து புரண ஒத்துழைப்பு நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்...

KANA VARO வெள்ளி, மார்ச் 26, 2010 4:39:00 முற்பகல்  

இது ஒரு சீரியசான விடயமே! பரீட்சை வினாத்தாள்கள் மொழி மாற்றம் செய்வதால் இந்த கடுந்தமிழ் பிரச்சினைகள் வரலாம்.

தீபிகா சரவணன் செவ்வாய், மார்ச் 30, 2010 7:10:00 பிற்பகல்  

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

thalaivan திங்கள், ஏப்ரல் 05, 2010 10:00:00 முற்பகல்  

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.