தமிழ் வி(ஞ்ஞா)ண்ணான புரோபசர்மார்க்கு

கனம் மதிப்புக்குரிய விண்ணான தமிழ் புரோபசர்மார்க்கு
ஐயா வணக்கம்,
கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் அவிஞ்சு போய் 2ம் முறையில் எப்பிடியாவது கரைசேர்வதற்கு முயன்றுகொண்டிருக்கும் அனுபவமிக்க மாணவன் நான் தங்களுக்கு எழுதும் (புலம்பல்) வேண்டுகோள் மடல் இது..

ஐயா கடந்த வருடம் இறுதி பரீட்சைக்கு சரியான ஆயத்தமில்லாமல் choice ஏ துணை என பரீட்சைக்கு சென்றேன்.

வினாத்தாளில் நான் விடையறிந்த இரு வினாக்கள் மட்டுமே காணப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு கேள்விக்கு என்னால் விடையளிக்கமுடியவில்லை. காரணம் விடை தெரியால் அல்ல.. நீங்கள் கேட்ட வினாவுக்கு குறிப்பிட்ட அந்த பாடத்தில் நான் பூரண தெளிவு பெற்றிருந்தும் உங்கள் கேள்வி எனக்கு புரியாததால் விடையளிக்க முடியவில்லை..
(கேள்வி மயக்கம், தங்களின் கடும் தமிழ் பிரயோகிப்பு)

அதாவது "கணிசமான" என்கிற ஒரு பதத்திற்கு கூடவா? குறையவா என்கிற சந்தேகத்தில் 20 புள்ளிகள் பறந்து போய்விட்டது. எனக்கு விடை தெரிந்ததே 2 கேள்விகளுக்கு மட்டும் தான் அதில் ஒரு கேள்வி தங்கள் தமிழ் புரியாததால் பறந்து போனது.

பரீட்சை வினாத்தாளில் எளிய தமிழை பிரயோகிக்கலாம் தானே? ஏன் கடும் தமிழை பிரயோகிக்கிறீர்கள்..? மேலதிகமாக நாம் இலக்கணமும் அல்லவா கற்க வேண்டிய தேவை உண்டாகிறது.

இது போக கடந்த வருட உயிரியல் வினாத்தாளில் 'காற்றிற் சுவாசம்", "காற்றில் சுவாசம்" இரண்டிற்குமான வேறுபாடு, விளக்கம் கேட்டிருந்தீர்கள்.

இங்கே "காற்றிற்", "காற்றில்" என்பதில் பாரிய மயக்கம் பரீட்சை மண்டபத்திலே ஏற்படுகின்றது.
காற்றில் என்பதை காற்றில்லாத போது எனக்கொள்வதா? காற்று + இல்(5 ம் வேற்றுமை) காற்றுள்ளபோது எனக்கொள்வதா? இதைப்போலவே காற்றிற் என்பதற்கும்...

இதே போல பல பதங்கள் இவற்றுக்கெல்லாம் எளிய தமிழை பிரயோகிக்கலாம் தானே..? ஏன் இந்த கடுந்தமிழ்.. பரீட்சை பேப்பரிலும் தமிழ் வாழணுமா? (இங்கே தமிழ் வாழ்கிறது அநியாயமாக இந்த கொடுந் தமிழால் நாங்கள் சாகின்றோம்)

இது போக உங்கள் வினாத்தாளிற்கான விடை மதிப்பீடு செய்யும் scheme ஒரு கேள்விக்கு வருடத்திற்கொரு விடை கொடுக்கிறது. ஒரு கேள்விக்கு பல விடை எதை நாங்கள் எழுதுவது.
எங்களுக்கென்றொரு பொதுவான புத்தகம் இருப்பின் அதன் படி விடையளிக்கலாம் ஆனால் அதுவும் இல்லை.
ஒவ்வொரு வாத்திமாரும் ஒவ்வொரு புத்தகத்தை பரிந்துரைக்கிறார்கள். எதைப் படிக்க?

புத்தகம் எழுதுகிறவர்கள் ஒவ்வொருவரும் தம் புலமையை வெளிக்காட்ட எழுதுகிறார்களே தவிர பரீட்சைக்கு தகுந்தாற்போல் எழுதுவதில்லை....

கடந்த வருடம், வினாத்தாளில் "புவிக்கு நைதரசன் கிடைக்கும் வழிகளை குறிப்பிடுக" என ஒரு கேள்வி இதற்கு பலர் இடி, மின்னல் என விடை கொடுத்திருந்தார்களாம்.

ஆனால் தாங்கள் இடி என எழுதப்பட்டிருப்பின் புள்ளிகள் வழங்கக்கூடாது என தெரிவித்திருந்தீர்களாம். இதற்கு தாங்கள் கொடுத்த விளக்கம் இடியும் மின்னலும் கிட்டத்தட்டவானவையாக இருப்பினும் மின்னல் தான் முன்னுக்கு வருவது ஆகவே மின்னல் தான் சரியானது என.

ஆனால் சகோதர மொழியில் இடி என எழுதப்பட்டதற்கு புள்ளிகள் வழங்கப்பட்டதாம். அங்கே வழங்குகிறார்கள் என்றால் நீங்களும் புள்ளிகள் வழங்கியிருக்கலாம் தானே...

இங்கேயும் உங்கள் தனித்துவமா? ஏற்கனவே தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஒரு நிலை இதில் தாங்களில் ஞாய, தர்ம கட்டுப்பாடு, தனித்துவங்கள் இன்னும் எம்மை பாதிக்காதா...

இலங்கை கல்வி தரம் வாய்ந்தது நாங்களும் அறிவோம். ஆனால் இப்படியான விடயங்கள் தரத்தை தீர்மானிப்பதாக இராது.

உங்கள் கடுந்தமிழ்கள் நுண்ணங்கிகள், நோய்கள், விஞ்ஞான பெயர்களில் பிரயோகிக்கப்படாத வரை சந்தோசம்.

உங்கள் கடுந் தமிழ் தாங்க முடியாமல் தான் என்னமோ பலர் முதலாவது முறைக்கு பின்னர் லண்டன் ஏலெவலுக்கு ஓடுகிறார்கள். அங்கே நேரடியான கேள்விகள் தானாம்.

ஏற்கனவே சாதாரண பாடம் சித்தியடைந்தவர்களிவ் 80தமானவர்கள் தான் உயர்தரத்திற்கு வருகிறார்களாம். மிகுதி பேர் வெளிநாட்டு கல்வியை நாடுகிறார்கள்.

தங்களின் மேற்சொன்ன பிரச்சனைகள் அதிகரிப்பின் 80 வீதம் 40 வீதம் ஆனால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஐயா இது தங்களுக்கான கண்டன மடல் அல்ல ஓர் விண்ணப்ப மடல்.

தயவு செய்து கருணை காட்டவும்.

தங்கள் மறுமொழியை பரீட்சை வினாத்தாளில் எதிர்பார்த்த வண்ணம்தங்களின் உண்மையுடைய மாணவர்கள்.

தமிழ் வாழ்க எங்கள் பரீட்சை பேப்ரில் தவிர.....

Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.