புதுக்கவிஞன் விமல்

வலைப்பதிவு எழுத ஆரம்பித்து இன்றுடன் கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகின்ற இந்த வேளையில், புதிதாக பதிவிலிட முன்பிருந்த ஊக்கமும் என்னிடம் போதிய ஆக்கமும் இல்லை. (நாங்க எப்பவும் உண்மையைச் சொல்வோம் அதையும் உரத்து சொல்வோம்.)

ஆனாலும் வித்தியாசமாகவும் மற்றவர்களைவிட புதிதாகவும் ஆரோக்கியமாகவும் எழுதணும் என்ற கொள்கையை நான் எப்பவும் கைவிடப்போவதில்லை. இதற்காக எவ்வளவு காலம் எடுத்தாலும் பரவாயில்லை. (இயக்குனர் பாலாவைப் போல நினைச்சிக்கொள்ளுங்க)

சரி எல்லா வகையான பதிவும் இடணும் என்பதற்கிணங்க இந்த முறை நல்ல கவிதையை பதிவில் இடலாம் எண்டு யோசிக்கும் போதே அண்மையில் எனக்கு கிடைத்த நண்பன். வயதில் என்னை விட மூத்தவராக இருந்தாலும் எல்லோருடனும் அன்பாக பழககூடியவர். அன்றாடம் தனது வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை படம்பிடிக்கிறார் தனது கவிதைகளினூடாக.

ஆங்கில வகுப்பில் கிடைத்த நட்பு இந்த நவீன கவிஞன் விமல் அண்ணாவின், சாதாரணமாக ஒரு விடயத்தை பற்றி பேசும் போதே அவ்விடயத்தைப்பற்றி பல கோணங்களில் ஆராய்வார். ஆங்கில வகுப்பில் ஆசிரியரின் பல கேள்விகளுக்கு வித்தியாசமான புதுமையான பதில்களை ஆங்கிலத்தில் கொடுக்க எத்தணிப்பார்.

வட்டுக்கோட்டையை பிறப்பிடமாக கொண்ட விமல் அண்ணா இன்றிலிருந்து எமது வலைப்பூவினூடாக அறிமுகமாகிறார். அத்துடன் இவரின் கவிதைகளுக்காக எமது தளத்தில் ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது. இவரது கவிதைகளில் இருந்து இதோ ஒரு நல்ல கவிதை

விமல்
உலகை மறந்து உள்ளம் குமுறிய போது….. உருவாகிய கவிதையிது.

சாதி ஒரு திட்மிட்ட சதி!

சாதிக்கப் பிறந்த மனிதர்களே
சாதியை இறைவன் படைக்கவில்லை
சாதியை நீரே உருவாக்கி
சாக்கடையாக்கினீர் பூக்கடை வாழ்வை!
“ஓடும் உதிரத்திலும் உதிரும் கண்ணீரிலும்
தேடிப்பார்த்தாலும் தெரிவதுண்டோ?.....

உடுப்பு வெழுப்பவன்………. னாம்
முடியை அலங்கரிப்பவன்…………னாம்
அந்தோ செய்யும் தொழிலை தெய்வமென்றால் - அந்த
தெய்வத்திற்கு சூட்டும் பெயர்தானிதோ?
தொழிலை வைத்துப் பார்க்காதே!
நிறத்தைக் கொண்டு பிரிக்காதே! – உயர்
குணத்தை கொண்டு பிரித்துப்பார்!

வள்ளல்கள் எல்லாம் உயர் சாதி – பிறர்
வருந்தி உழைத்ததை,
கொள்ளை புரிபவன் கீழ்சாதி
கற்றவர் எல்லாம் மேல்சாதி
மற்றவர் எல்லாம் தாழ்சாதி

ஒழுக்கம் உடையவரே உயர் சாதி
இழுக்கு உடையவரோ இழிசாதி
இரக்கம் நிறைந்தவன் இறைசாதி
ஈவிரக்கமற்றவன் யமசாதி

நீதியைக் கொண்டவன் தேவசாதி
நீதியைக் கொன்றவன் அசுர சாதி

உயர் குணத்தை கொண்டு
பிரித்துக்கொண்டால்
உயர் குலத்தில் பிறந்தவர்
எத்தனை பேரோ?

எப்புடி கவிதை விமல் விமல் தான்.

இந்தக் கவிதை 22-05-2006 ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை விமலினால் எழுதப்பட்டது. இந்தக் கவிதையின் முழு உரிமையும் அண்ணன் விமலிற்கே உரியது.

என் பங்கிற்கு ஒரு விசயம் உண்மையா சாதியை முழுமையாக எதிர்ப்பவர்கள் கல்யாணம் கட்டாத பிரமச்சாரிகள் தான் ஏன்னா அவங்களிட்ட தான் பெண்(ஞ்) சாதி கூட இல்லை. எப்படி

வேலனின் தீவிர ரசிகன் நான்

இன்று காலையில் கலைஞர் தொலைக்காட்சியில் “சிரிப்பு வருது” நிகழ்ச்சி பார்த்திட்டிருந்தன். அதில நகைச்சுவை நடிகர் தாமுவின் நகைச்சுவை காட்சி கொஞ்சம் போச்சுது. அதில இந்த நுணுக்கம் கண்டுபிடிச்சு காமெடி பண்ணுறது எண்டு சொல்லுவாங்களில்லையா அதை போல நுணுக்கம் கண்டுபிடிச்சு சில காமெடி பண்ணுவார்.

கூட்டமாயிருந்த பேருந்து ஒன்றில் “புட்போட்” ல நிண்ட ஒருவர் அதில நிற்கமுடியாமல் மேல நிண்ட தாமுவிடம் கொஞ்சம் தள்ளுங்க சேர் எண்டதும் தாமு அந்த நபரை வெளியால தள்ளிவிட்டுறுவார்.

இது போல பஸ்ஸில் நடத்துனர் தாமுவிடம் இறங்கி பின்னால ஏறுங்க சேர் எண்டதும் தாமு கீழ இறங்கி பின் பக்கமாக திரும்பி அதே வழியாக மீண்டும் ஏறுவார்.

இதே போல தயிர் பானை ஒன்றை தூக்கமுடியாம கஸ்டப்பட்டிட்டு இருக்கிற ஒரு வயதுமுதிர்ந்தவர் தாமுவிடம் இதை கொஞ்சம் தூக்கி விடு தம்பி என்றதும் தாமு அந்தப் பானையை தூக்கி கீழே விட்டு விடுவார். இப்படி பல தமிழில் நுணுக்கம் கண்டு பிடிச்சு காமெடி பண்ணுவார்.

இந்த நகைச்சுவைக் காட்சிகளை பார்த்திட்டிருக்கும் போதே சின்னவயசில அம்மா எனக்கு சொன்ன கல்லடி வேலரின் கதைகள் தான் நினைவுக்கு வந்தது.

“ப்ளாஸ் பாக் ஓப்பின்”

கல்லடி வேலரைப்பற்றி யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் தெரியாதவர்களுக்கு அவரைப்பற்றி ஒரு சிறு அறிமுகம். ஈழத்து தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் இவரும் ஒருவர். நகைச்சுவையுடன் நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைக்கும் திறன் கொண்டவர். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள வசாவிளானைப் பிறப்பிடமாகக்கொண்டவர். இவருடைய உண்மையான பெயர் வேலன். இவருடைய வீட்டுக்கு முன்னால் பெரிய கல் ஒன்று இருந்த படியால் இவரை எல்லோரும் “கல்லடி வேலன்” என்றழைக்கலாயினர். (காரணப்பெயர்)

சரி இப்ப ஞாபகத்தில் இருக்கும் இவருடைய சில, சிந்திக்க வைக்கும் சீர்திருத்த நகைச்சுவை சம்பவங்கள் உங்களுக்காக

குடிநீர் எடுக்குமிடம், வைத்தியசாலை, பஸ் தரிப்பு நிலையம் போன்ற இடங்களில் “இங்கே துப்பப்படாது” என்ற பெயர்ப்பலகை காணப்பட்டது. கல்லடி வேலர் இந்த பெயர்ப்பலகையில் துப்பிக்கொண்டிருந்தாராம். போலிசார் அவரிடம் வந்து இங்கே எழுதியிருப்பது விளங்கவில்லையா? ஏன்று அதிகாரத்துடன் கேட்ட போது, கல்லடி வேலர் அடக்கமாக பதில் சொன்னாராம் அது தான் துப்பிப் பாரக்கிறேன். படுகிறதா? என்று என்றாராம்.

இதே போல விருந்தினர் ஒருவரின் வீட்டிற்கு கல்லடி வேலர் போயிருந்தாராம் அப்பொழுது அங்கே அவரது உறவினர் சொன்னாராம் “கால் முகம் கழுவிவிட்டு வாங்க சாப்பிடலாம்” என்று உடனே கல்லடி வேலர் கேட்டாராம் “அப்போ முக்கால் முகத்தை என்ன செய்யச் சொல்கிறீர்கள்” என்றாராம்.

இதே போல
தமிழில் பாண்டித்தியமும் புலமைத்திறனும் கொண்ட கல்லடி வேலர், பார்ப்பதற்கு எப்பொழுதும் எளிமையான தோற்றத்துடன் தானாம் காணப்படுவார். அக்காலத்தில் வேறொரு பண்டிதர் தமிழில் தான் பாண்டித்தியம் பெற்றவர் என்ற இறுமாப்பில் பண்டித மொழியில் எல்லோரிடமும் கதைப்பது அவரது வழக்கமாம். (அது தான் நம்மட பாi~யில சொல்லப் போனால் “படம் காட்டிறது”)
இவருடைய இறுமாப்பை கல்லடி வேலரும் நன்கு அறிந்திருந்தாராம்.

ஒரு சமயம் அந்தப் பண்டிதர் சாவகச்சேரிக்கு அடுத்த சந்தியான நுணாவில் சந்தியில் நின்று கொண்டு யாழ்ப்பாணம் செல்லும் பாதையை சுட்டிக்காட்டி, சாதாரண மனிதர் போல் காட்சியளித்த கல்லடி வேலரிடம் “இவ்வழி ஏகின் எவ்வழி புக்கும்?” எனக்கேட்டாராம்.
இதற்கு கல்லடி வேலர் அடக்கமாக “கரதண்டம் சம்புகுண்டம் புக்கும்” என்றாராம.; அந்தப் பண்டிதர் கலங்கிப் போனாராம். அவரால் கல்லடி வேலர் சொன்னது புரியவில்லை. அதன் விளக்கம் (கரம் என்றால் கை, தண்டம் என்றால் தடி, சம்பு என்றால் நாவல், குண்டம் என்றால் குழி)
அதாவது கைதடி, நாவற்குழி போகும் என்பதை இப்படி சொல்லியிருக்கிறார். எப்புடி


அம்மா சொன்ன கல்லடி வேலரின் கதைகளில் இவ்வளவு தான் எனக்கு ஞாபகம் இருக்கு. கல்லடி வேலரின் கதைகளின் மூலமாக அவரின் முகம் தெரியாமலே அவரின் தீவிர ரசிகன் ஆனவன் நான். உண்மையா இவருடைய கருத்துக்களால் நிறைய தமிழில் சீர்திருத்தங்கள்; நடைபெற்றது.

உங்களுக்கு யாராவது இவரைப்பற்றி வேற ஏதாவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க….

தெரிஞ்ச விசயத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதும் தெரியாத விசயத்தை மற்றவர் தெரியப்படுத்திறதும் தானுங்களே நல்ல நண்பர்களுக்கு அழகு. எனவே எனக்கு தெரிஞ்சத உங்களுக்கு தந்திருக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்சத எனக்கு சொல்லுங்க.

(பழைய சேம் டயலொக் தான் கொஞ்சம் அட்ஜஸ்ற் பண்ணுங்க.)Blog Widget by LinkWithin

நான்

மாணவன்.
படிக்கிறேன்,
படித்துக்கொண்டேயிருக்கிறேன்.